Monday, 11 January 2016

சுவடிப்பாதுகாப்பு வரலாறு

சுவடிப்பாதுகாப்பு என்னும் தலைப்பில் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூவிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். பல்லாயிரம் ஆண்டு பெருமை பேசும் சுவடிகளின் வரலாற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் எனது பதிவுகள் அமையும் என்று நம்புகிறேன். சுவடிகளின் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பு முறைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். நமது பண்பாட்டை காலம் காலமாகப் பேணிக் காத்து தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்வது நமது பொறுப்பாகும். அந்நிலையில் இவ்வாறான பதிவு ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் என்று நம்புகிறேன். எனது வலைப்பூவிற்கு உங்களின் ஆதரவைத் தரவேண்டுகிறேன். உங்களது வாழ்த்துகளும் ஆதரவும் என்னை மென்மேலும் எழுத வைக்கும் என்று நம்புகிறேன். அண்மைக்காலமாகத் தமிழ்த் தட்டச்சு கற்றுவருகிறேன். விரைவில் முழுமையான அளவில் ஈடுபடுவேன்.  

முதல் பதிவாக எனது சுவடிப்பாதுகாப்பு வரலாறு என்னும் என்னுடைய நூலுக்கு நண்பர் முனைவர் பா. ஜம்புலிங்கம் (கண்காணிப்பாளர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) தந்துள்ள மதிப்புரையைப் பகிர்கிறேன். தொடர்ந்து பிற அறிஞர்களுடைய கருத்துக்களைப் பகிர்வேன்.


அன்பார்ந்த ஐயா,

வணக்கம். தங்களின் சுவடிப்பாதுகாப்பு வரலாறு நூலைப்படித்தேன். தங்களின் ஆய்வேடு நூலாக்கம் பெறவேண்டும் என்ற அவாவினைப் பலமுறை தங்களுடன் வெளிப்படுத்தினேன். நூலைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தேன். தங்களின் முயற்சி வருங்கால சந்ததியினருக்குப் பெரும் பயன் தரும் அளவு உள்ளது.

இத்துறையில் பல்லாண்டு அனுபவம் பெற்ற தாஙகள் பட்டறிவையும் பயன்படுத்தி தமிழர் நலன் கருதி மிகவும் சிறப்பாகப் படைத்துள்ளீர்கள். இந்தத் துறையில் வெளிவரும் முழுமையான நூல் என்று கூறுமளவு எழுத்தின் தோற்றம் தொடங்கி சுவடிப்பாதுகாப்பு உணர்வு எவ்வகையில் அமையவேண்டும் என்ற நிலையில் ஆழமாகச் சிந்தித்து எந்த ஒரு செய்தியையும் விடுபடாமல் சேர்த்து இத்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள்.

நூல்களைப் படிப்போரும் பாதுகாக்க விரும்புவோரும் இந்நூலைப் படிக்கவேண்டியது அவசியம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாணினியும், தொல்காப்பியமும், சங்க இலக்கிய நூல்களும் நமக்கு இன்றைக்குக் கிடைப்பதற்குக் காரணம் தொன்று தொட்டு இருந்துவரும் படியெடுத்து வரும் பழக்கம் என்பதை அறியும்போது மிகவும் வியப்பாக உள்ளது. காலங்காலமாக நம் முன்னோர்கள் இவற்றைக் காத்து நமக்கு அளித்துள்ளனர். 
இவ்வாறான நூல்களைப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை மட்டுமன்றி அவற்றை எந்த வகையில் பாதுகாக்கலாம் என்ற வழிமுறைகளையும் தாங்கள் தந்துள்ளமை போற்றத்தக்கதாய் உள்ளது. நமது கலாச்சார மேம்பாட்டையும், பெருமையையும் தம்முள் பொதிந்துகொண்டிருக்கும் சுவடிகளைப் பற்றிய இந்நூல் படிப்பதற்கு மட்டுமன்றி பாதுகாக்கவேண்டியதும்கூட.

தமிழர் அனைவரும் பயனுறும் வகையில் இந்நூலைப் படைத்த தாங்கள் பிறரும் வகையில் ஆங்கிலத்தில் இந்நூலை வெளிக்கொணர வேண்டுகிறேன். இப்பொருண்மை தொடர்பாக பல கட்டுரைகளும், நூல்கம் வந்தாலும்கூட தங்கள் கோணத்தில் தமிழர் மொழி நாகரிகம், பண்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய அரிய தகவல்களைக் கொண்ட இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தால் அதன் பயன் இன்னும் பெருகும் என்பது என் எண்ணம்.

இந்நூல் மூலமாக வரலாற்று நூல்களில் இடம் பெறவுள்ள தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

அன்புள்ள
பா.ஜம்புலிங்கம்.

நூலின் தலைப்பு : சுவடிப்பாதுகாப்பு வரலாறு
ஆசிரியர்  :  ப.பெருமாள்
பதிப்பகம்  :  கோவிலூர் மடாலயம், காரைக்குடி அருகில், சிவகங்கை மாவட்டம் 630 307 
விலை  : ரூ.160